சனி, 30 மே, 2015

மூட்டுவலி போக உணவும் சித்தமருத்துவமும்

சாயந்திர வேளை வீட்டுத் திண்ணையில் வழக்கமாக மணக்கும் நாகர்கோயில் ஆசான் தைலவாசனை, வயலில் இருந்து தாத்தா வந்துவிட்டதை அறிவிக்கும். ”ஏன் தாத்தா உங்க கால் இப்படி வளைஞ்சு இருக்கு?””’’ என்ற எங்கள் கேள்விக்கு உழைத்து இறுகி வறண்டு இருக்கும் மூட்டும் அதன் கீழ் வளைந்து இருக்கும் முழங்காலும் தைல மினுமினுப்புடன் வாசனையுடன் உழைப்பின் கதை சொல்லும். ”பட்டணத்துக்காரா! என்னடா..கால்ல பலம் வச்சிருக்கே! கொஞ்சம் அழுத்தி மிதிடா!” என்ற அவரது செல்லக் கோபம், ”அழுத்தினா வலி வரணுமே! வலி போகும் நல்லா அழுத்தி அமுக்கச் சொல்கிறாரே1” என்பது புரியாமல் அழுத்திவிட திண்ணையில் தலைக்குத் துண்டைமட்டும் தலையணையாய் வைத்து லேசாய் தாத்தா கண் அயர்வார்.
இன்று ”ஏன் இப்படி கிழவியாட்டம் எப்ப பார்த்தாலும் இடுப்பில் வலிக்கிறது; மூட்டு நோகிரதுன்னு புலம்பிறே? அப்படி என்ன வேல செய்து கிழிச்சிட்ட?,” என வரும் எகத்தாள வார்த்தைகள் கூடுலாய் எரிச்சலையும் கோபத்தையும் கொட்டும்.
வயசானா வரும் வலி மூட்டுவலி என்ற கதை ரொம்பவே மாறிப் போய், துள்ளிக் குதிக்க வேண்டிய இளம்பருவத்தில் இடுப்பில் வலி, கால் மூட்டில் வலி, தோள் மூட்டில் வலி, கழுத்து வலியோ..அப்படியே பரவி பின்பக்க தோள், முன்கை, முழங்கை என வலி..என இளமையில் விரட்டும் மூட்டு வலி இன்று ஏராளம். என்ன ஆச்சு இந்த மூட்டுகளுக்கு? பாட்டி தாத்தா சொத்தாக இருந்தது ஏன் இப்போது அவசரமாய் அனைவரையும் படுத்துகிறது?
நிறைய வாழ்வியல் மாற்றங்கள், மாடர்ன் கிச்சன் மறந்துபோன பாரம்பரியம், கூடிவிட்ட சொகுசுக் கலாச்சாரம், இவை தான் பொருத்துக்களை (JOINTS) இளமையிலேயே வலுவிழக்க செய்திருக்கிறது..அவற்றின் வலு கூட்டி, நம் வாழ்வையும் உற்சாகமாய் நகர்த்த(மன்னிக்க..ஓடவைக்க) என்ன செய்யலாம்?..இனி பார்க்கலாம்!

ஒரு மாருதி காரை தாங்கும் வலு உண்டு நம் ஒவ்வொரு கால் மூட்டுக்கும்...ஆனால் அதற்கான உணவும் உழைப்பும் சீராக இருந்திருக்க வேண்டும். அது மாறும் போது நம் நோஞ்சான் உடலைக் கூட தூக்க சேட்டை செய்யத் துவங்கும். இளம் வயது முதல் உணவில், சரியான அளவில் கால்சியம், இரும்பு, துணை கனிமங்கள் சேர்ந்த ஆரோக்கிய உணவுகள் அன்றாடம் சேர்ப்பது தான் மூட்டுப் பாதுகாப்பில் பிள்ளையார் சுழி.
1 முதல் ஒன்றரை வயது வரை கட்டாயமாகத் தாய்ப்பால், அதன் பின் 6-8 வயது வரை கண்டிப்பாய்த் தினசரி நவதானியக் கஞ்சி, கீரை சாதம், அடிக்கடி தேங்காய்ப்பால் சேர்த்த காலை உணவு, மோர், பீன்ஸ், அவரை, டபுள் பீன்ஸ், வெண்டைக்காய், கேரட் என காய்கறி கலந்த மதிய உணவு மிக மிக அவசியம். எனக்கு ஆசை தான்..சாப்பிடவே மாட்டேங்கிறான்..அவனோட மல்லாட எங்க எனக்கு நேரம்! லேட்டா போனா மானேஜர் முறைக்கிறார் என்ற சாக்கு போக்கு சொல்லாமல், என்ன வித்தை செய்தாவது சாப்பிட வையுங்கள். நாளைய உங்கள் சுமையையும் சேர்த்து சுமக்க, புன்னகையுடன் உங்கள் குழந்தை தயாராகும். கண்டிப்பாய்த் தினசரி 2 மணி நேரம் வியர்க்க விளையாட விடுங்கள். கம்ப்யூட்டரில் விளையாடும் ”ஸபாக் கேம்” அல்ல; கில்லியோ, கிரிக்கட்டோ நல்லா ஓடி வியர்க்க விளையாடும் விளையாட்டை ஊக்குவியுங்கள்; ”கால் வலித்தால் பைரன்னர்; தாக மெடுத்தால் கூல் டிரிங்கஸ்,” என மொக்கையாக இருக்கும் சொகுசு கிரிக்கட்டைக் காட்டிலும், வியர்க்க வியர்க்க ஓடி ஒடி விளையாடும் எந்த விளையாட்டும் உடலையும் உள்ளத்தையும் உறுதியாக்கும். குறிப்பாய் மூட்டுக்களை உறுதிப்படுத்தும்.
அதை விடுத்து பிள்ளையார் குளோனிங்காய் உடம்பை வளர்த்து, ”நான் வருவேன் பின்னே; என் செல்லத் தொப்பை வரும் முன்னே,” என பருத்த உடலுடன் பிள்ளை இருக்கின்றான் என்றால், “ அதல்லாம் வளர்ர பிள்ளை; நீங்களே கண்ணு வைக்காதீங்க,” என எவராவது சொன்னால் அதை நம்பி ஏமாந்து விடாமல், அவன் சரியான் எடையில் இருக்கிறானா? ஊளை சதை உள்ளதா என்பதை உங்கள் குடும்ப மருத்துவரிடம் உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், அதிக உடல் எடை தான் பெரும்பாலான மூட்டுவலிக்கு முக்கியக் காரணம். ஓடி ஆடி வள்ர்வது தான், ஆரோகியத்திற்கு குழந்தை போடும் முதல் மூலதனம்.
“புளி துவர் விஞ்சின் வாதம்”, என்கிறது சித்த மருத்துவம். அதிக புளிப்பு, மூட்டுகளுக்கு நல்லதல்ல. புளி அதிகம் சேர்க்கப்படும் புளிக்குழம்பு, காரக்குழம்பு, புளியோதரை இவற்றை மூட்டு முனங்கும் நபர்கள் விலக்குவது நல்லது. ”வாயுவெலாது வாதம் வராது” என்றும் சித்த மருத்துவப் பாடல்கள் கூறும். ”மண் பரவு கிழங்குகளில் கருணையின்றி பிற புசியோம்” என்று வாயுவை விலக்கி நோய் அணுகாது இருக்கவும் வழி சொல்கிறது சித்த மருத்துவம். ஆதலால் ஃப்ரென்ச் ஃப்ரை, உருளைக்கிழங்கு பொடிமாஸ், வாழைக்காய் பொரியல் என கேஸ் மெனுக்களை மூட்டுவலிக்கார்ர்கள், உடல் எடை குறைய விரும்புபவர்கள் விலக்குவது முக்கியம்.
வலி நிவாரணிகள் பக்கம் அதிகம் போகாமல் இருப்பது மிக மிக முக்கியம். ”நேரே மருந்துகடைக்கு போய் ரொம்ப வலிக்கிறது எனக் கூறி ஸ்ட்ராங்கா ஒரு மாத்திரை தாப்பா” என மிரட்டி, தினசரி வலிக்கு விடுதலை தேடுவது மோசமான பழக்கம். பல வலி நிவாரணிகள் கண்டபடி நெடுநாள் பயன்படுத்தினால் நிச்சயம் சிறுநீரகத்தைப் பாதிக்கும்.
வலி நீங்க சித்தமருத்துவத் தைலங்களை உங்கள் அருகமையில் உள்ள சித்தமருத்துவமனைகளில் பெற்று பயன்படுத்துவது நல்லது.

எண்ணைய் மசாஜ் எனும் பிழிச்சல் சிகிச்சை மூட்டுவலிகளுக்கு மிகச் சிறந்த ஒன்று. வலிஉள்ள மூட்டு தசைப்பகுதியில் நிறைந்து இருக்கும் நிண நீரை (lymphatic drainage) வெளியேற்ற அந்த சிகிச்சை சிறந்த ஒன்று. முக்கியமான விஷயம் சரியான திறமையான சிகிச்சை அளிப்பவரைத் தேர்ந்து எடுப்பது.
”ஸ்பாண்டிலோசிஸ்” எனும் கழுத்து-முதுகு பக்க முதுகுதண்டுவட எலும்பின் மூட்டுக்கிடையிலான தட்டுகள் விலகலோ(disc prolapse), நகர்வோ இருப்பின் சரியான நோய்க் கணிப்பும், சிகிச்சையுடன் கூடிய உடற்பயிற்சி, இயன்முறை மருத்துவம் (physiotherapy), பிழிச்சல் சிகிச்சையும்(medicated oil massage) மிக அவசியம். அலட்சியமாய்.. ”ஏ..ராசா..கொஞ்சம் முதுகில் மிதிச்சு விடு,” என பேரனை மிதிக்க சொல்வது தட்டுக்களை(disc) தடாலடியாக விலக்க வைத்து நிரந்தரமாய் படுக்க வைத்தும் விடக் கூடும்.
தினசரி 40 நிமிட நடை.பின் 15 நிமிட ஓய்வு. அதைத் தொடர்ந்து 30 நிமிடம் மூச்சுப்பயிற்சியுடன் கூடிய சூரியவணக்கத்துடன் முதலான 4-5 யோகாசன்ங்கள், கால்சியம்-கீரை நிறைந்த, புளி வாயுப் பொருட்கள் குறைந்த உணவு இவற்றுடன் கண்டிப்பாய் ஒரு குவளை மோர், ஒரு கிண்ணம் பழத்துண்டுகள், 30-45 நிமிட மாலை நடை அல்லது விளையாட்டு இருக்குமா உங்களிடம்..மூட்டுவலி அதிகம் உங்களை அணுகாது.

மேலும் தொடர்புக்கு:

சித்த மருத்துவர் அருண் சின்னையா
எண்: 155, 94  வது தெரு,
15 வது செக்டார், கே.கே.நகர்,
சென்னை – 78
அலை பேசி: 98840 76667, 98401 77783
இணைய தளம்: www.drarunchinniah.in
சித்த மருத்துவர் அருண் சின்னையா அவர்களின் சித்த மருத்துவ (குறிப்பு) நூல்களை  (e-book) படிக்க…     சித்த மருத்துவ மின் புத்தகங்களை பெற…

 Android App:  

iOS App:    

வெள்ளி, 29 மே, 2015

சாப்பிடாத குழந்தைக்கு....

வாய்க்கால் வரப்பில் வேலை செய்யும் களத்துமேட்டுப் பெண்கள் முதல் வாட்ஸ்-அப் பெண்கள் வரை கவலையுடன் பகிர்ந்துகொள்ளும் விஷயம், 'என்ன செஞ்சாலும் என் குழந்தை சாப்பிடுவேனானு அடம் பண்ணுது’ என்பதுதான். 'அதட்டி, மிரட்டி, கொஞ்சி, கெஞ்சி எல்லா ஆட்டமும் ஆடிப் பார்த்தாச்சு. தட்டுல போட்டது அப்படியே கெடக்கு. ஸ்கூலுக்கு டப்பால கொண்டுபோனது அப்படியே திரும்பி வருது. என்ன சார் செய்ய?’ என மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்கும் பெற்றோரின் எண்ணிக்கை இப்போது அதிகம். 'சிறுதானிய சுண்டல், பழம், காய்கறிகள்னு என்னென்னவோ சொல்றீங்க. ஆனா, குழந்தை வாயைத் திறந்தாத்தானே அதெல்லாம் கொடுக்க முடியும்’ என அம்மாக்கள் வருத்தப்பட, 'எதுக்கு இந்தக் கவலை? அதான் அத்தனை நல்ல சத்துக்களையும் நாங்க துரித உணவுல, ஊட்டச்சத்து பானத்துல ஒளிச்சுவெச்சுத் தர்றோம்ல’ என அந்த வருத்தத்திலும் வணிகம் பார்க்க நினைக்கின்றன சத்துணவு நிறுவனங்கள். அந்த உணவு மற்றும் பானங்களின் பணப்பரிவர்த்தனை இந்தியாவில் 3,000 கோடிகளைத் தாண்டுகிறதாம்.
சரி... பிரச்னைக்கு வருவோம்!
பசி வந்தால் எந்தக் குழந்தையும், 'மம்மூ தா’ எனக் கேட்டு வாங்கிச் சாப்பிடும். ஆக, குழந்தைகளுக்குப் பசியைத் தூண்டுவதே, உணவூட்டலின் முதல் செயல். ஆனால், 'பள்ளி செல்லும் குழந்தைக்குப் பசியைத் தூண்டுவது எப்படி?’ என்று திட்டமிட்டு பிரயோஜனம் இல்லை. ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்பிருந்தே, அந்த அக்கறை தேவை என்கிறது நம் பாரம்பரியம்.
தமிழர் மருத்துவத்தில், வாழ்வியலில் 'மாந்தம்’ என்ற அற்புதமான ஒரு சொல் வழக்கில் இருந்தது. ஆனால், இன்றைய துரித யுகத்தில் அது ஒட்டுமொத்தமாகத் தொலைந்துவிட்டது. மாந்தத்தைச் சரிசெய்யாவிட்டால், குழந்தைகளுக்கு சுலபத்தில் பசியெடுக்காது. அதுவே, வருங்காலத்தில் பல நோய்களுக்கு வழிவகுக்கும். குழந்தை உடல் எடை குறைந்து, நோஞ்சானாக இருக்கும். பசி குறைந்திருத்தல், மலக்கட்டு, ஜீரணம் இன்றி மலம் கழிதல், நீர் அல்லது சீதமுடன்கூடிய வயிற்றுப்போக்கு... என, பச்சிளங்குழந்தைகள் மந்தமாக இருப்பதைத்தான் மாந்த நோய்களாக அடையாளம் காட்டினார்கள் நம்மவர்கள்.
குழந்தை அழுவதைவைத்தும், அதற்கு வரும் காய்ச்சலின் தன்மையைக்கொண்டும், வீசிங் எனும் இரைப்பில் அது படும் அவஸ்தைகளைக்கொண்டும் அதற்கு அள்ளு மாந்தம், போர் மாந்தம், சுழி மாந்தம் என மிக அழகாக விவரித்த 'பீடியாட்ரீஷியன்’ பாட்டிகள் அன்றே நம்மிடையே உண்டு. டயாப்பர் இல்லாத காலத்தில் ஒரு பேருந்து பயணத்தின்போது பக்கத்து இருக்கையில் அம்மா கையில் இருந்த குழந்தை ஒன்று மலம் கழித்துவிட, 'முதல்ல மாந்தத் தைச் சரிசெய்யுமா... இல்லைனா கணச்சூடு ஏறி குழந்தை வாடிப்போயிடும். அப்புறம் நீ எதைக் கொடுத்தாலும் உடம்பு பிடிக்காது’ எனச் சொல்லிய அக்காக்களை இப்போது பார்க்க முடியவில்லை. வருங்காலத்தில் கணச்சூடு போன்ற உபாதைகள் வராமல், குழந்தைகளின் மாந்தப் பருவத்திலேயே வாரம் ஒரு நாள் வேப்பங்கொழுந்து, ஓமம், மஞ்சள் துண்டு சேர்த்து அரைத்து மிளகு அளவுக்கு உருட்டி, அதில் தேன் கோட்டிங் கொடுத்து, வயிற்றுப்புழு நீக்கும் பழக்கமும் காணாமல் போய்விட்டது.
தாய்ப்பால் கொடுக்கும் சமயம், நிலக்கடலை உள்ளிட்ட ஜீரணிக்கச் சிரமம் தரும் பொருட்களைச் சாப்பிடாதீர்கள் என நம் முன்னோர்கள் சொல்வதை, நவீனம் முன்பு மறுத்தது. ஆனால், இப்போது அதே நவீனம், 'பிரசவித்த தாய் ஒருவேளை சாப்பிடும் ஏதேனும் புரதப்பொருள், தாய்க்கு ரத்தத்தில் lgE-ஐ அதிகரித்தால் (lgE- உடலின் அலர்ஜி பாதிப்புக் குறியீடு), அது தாய்ப்பால் வழியாக குழந்தைக்கு வரக்கூடும். அதனால், குழந்தைக்கு மாந்தமோ, கரப்பான் எனும் அலர்ஜி தோல்நோயோ வரலாம். எனவே, நிலக்கடலை குறைச்சுக்கலாமே, சோயா வேண்டாமே’ என்கிறது. ஒரே விஷயம்தான்... வேறு மொழியில்; வேறு வார்த்தைகளில்!

குழந்தைக்கு தாய்ப்பால் வழியாக நல்ல விஷயங்களைக் கொண்டுசென்று, திட உணவு (weaning food) சாப் பிடத் தொடங்கும் சமயம் ஜீரணத்தைத் தூண்டி, நன்கு பசிக்கவைக்கவும்தான், 'பிரசவ நடகாய் லேகியத்தில்’ அத்தனை மணமூட்டி மூலிகைகளையும் சேர்த்து, பிரசவித்த பெண்ணுக்கு அன்று தாய் வீட்டில் கொடுத்தனர். வீட்டிலேயே கிளறிக் கொடுக்கப்படும் அந்தச் சிறப்பு உணவில் உள்ள தண்ணீர்விட்டான் கிழங்கும், வெந்தயமும், பூண்டும் தாய்க்கு அதிக பால் சுரப்பைக் கொடுக்கும் என்றுதான் நெடுநாட்களாக சித்த ஆயுர்வேத மருத்துவர்கள்கூட நினைத்திருந்தனர். ஆனால், சமீப ஆய்வுகள் அந்த வெந்தயமும் பூண்டும் தாய்க்கு மட்டுமல்ல குழந்தைக்கும் உரமூட்டும் என்று உணர்த்துகிறது!
ஒன்றரை, இரண்டு வயதில் மாந்தத்தினால், அடிக்கடி வயிறு உப்புசத்துடன் வயிற்றுப்போக்கும் இருக்கும் குழந்தைக்கு, மிக அதிகமாகப் பயன்படும் மூலிகைக் கீரை உத்தாமணி. 'உத்தமம்’ என மகுடம் சூட்டி நம் சமூகம் கொண்டாடிய மூலிகை அது. வீட்டிலேயே விளக்கெண்ணெயில் உத்தாமணிச் சாற்றை சேர்த்துக் காய்ச்சி, அந்த எண்ணெயைக் குழந்தைகளுக்கான முதல் கைவைத்திய மருந்தாகப் பயன்படுத்திய நெடுநாள் வரலாறு நம்மிடையே உண்டு. அதைவிட அசரவைக்கும் செய்தி, அதைக் குழந்தைக்குப் பரிமாறிய விதம்! 'டிராப்பரில்’ வைத்து வாயில் ஊற்றினால், கொடுக்கும்போது ஒருவேளை குழந்தை திமிறி, மருந்து உணவுக்குழாய்க்குப் பதில் மூச்சுக்குழாய்க்குப் போய் நிமோனியா வந்துவிடக் கூடாது என எச்சரிக்கைகொண்டிருந்தனர் அப்போதே. அதனால் உத்தாமணி எண்ணெயை, தாயின் மார்புக்காம்பில் தடவி பால் கொடுக்கும்போது முதல் துளியாக உறிஞ்சவைக்கச் செய்திருக்கிறார்கள். அதுவும் குழந்தை குளித்ததும் பசித்திருக்கும்போது, எண்ணெயின் சுவை உணராதபடி வேகமாக உறிஞ்சும் என்பதால், அந்தச் சமயமே மருந்தைத் தடவச் சொன்ன நம் பாட்டி எந்தப் பட்டமும் படிக்காத விஞ்ஞானி!
பிறக்கும் முன், பிறந்த குழந்தைகளுக்கு இதெல்லாம் சரி..? வளர்ந்த குழந்தைகளின் மாந்தத்துக்கு என்ன செய்வது? 'போக்கை அடக்குமாம் பொடுதலை; ஆற்றை அடக்குமாம் அதிவிடயம்’ என்கிறது மாந்தத்துக்கான சித்த மருத்துவ முதுமொழி. மாந்தத்தில் வரும் வயிற்றுப்போக்கை அடக்கும் குணம் பொடுதலைக்கு உண்டு. ஆறு சீற்றத்துடன் பாய்வதைப்போல நீராகக் கழியும் வயிற்றுப் போக்குக்கு அதிவிடயம் அருமருந்து. பொடுதலையைச் சாறாக எடுத்துச் சூடாக்கி சுரசம் பண்ணியும், அதிவிடயத்தைக் கஷாயமிட்டும் கொடுத்தால் மாந்தம் மறையும்.
பின்னாளில் 'கணச்சூடு’ என்று அன்று சொன்ன பிரைமரி காம்ப்ளக்ஸ் எனும் இளங்காச நோயின் வருகைக்கு, சிவப்புக் கம்பளம் விரிப்பதுகூட இந்த மாந்தம்தான். 'மைக்கோ பாக்டீரியம் டியூபர்குளோசிஸ் எனும் கிருமிதானே அதைத் தருகிறது. மாந்தக் கழிச்சலுக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்?’ எனப் படித்தவர்கள் வினவலாம். கழிச்சலில் குறைந்த நோய் எதிர்ப்பாற்றலில் சாதாரணமாகத் திரியும் அந்தக் கிருமி உடலுக்குள் குடித்தனம் நடத்த ஆரம்பித்து, நுரையீரலில் தொடங்கி அத்தனை உறுப்புகளையும் பதம் பார்ப்பது அதனால்தான். நவீன மருத்துவத்தில் 6 - 8 மாத காலத்தில் இதனை முற்றிலுமாக ஒழிக்க மருந்து இருக்கும் நிலையிலும், 'எங்களுக்கெல்லாம் இது வருமா?’ என்ற அலட்சியத்தில் மெலிந்த பல குழந்தைகள், பசியில்லாக் குழந்தைகள் காசநோயின் கணிப்பில் இருந்து தப்பி பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
'காசம் மட்டுமல்ல... ஆட்டிச நோய் நிவாரணத்துக்குக்கூட இந்த மாந்தக் கழிச்சலை முதலில் சரிசெய்யுங்கள். அது குழந்தையின் மூளைச் செயல்சிதறலைச் சரியாக்கி மீட்டெடுக்கும்’ என ஆய்வுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இத்தனைக்கும் காரணமான மாந்தத்துக்குத் தடுப்பாக நம் வாழ்வியலோடு ஒட்டியிருந்த விஷயங்கள் ஏராளம். பல்லூறும் பருவத்தில் வாயில் கடிக்க கையில் வசம்பு வளையல், வைத்து விளையாட வேங்கை மரத்தில் செய்த மரப்பாச்சி பொம்மை எல்லாம் இப்போதைய பார்பி டால்களிடமும் டெடி பியர்களிடமும் தோற்றுவிட்டன.
'போர்மாந்தக் கட்டை’ என்ற ஒன்று, திருச்சி மாவட்டப் பகுதிகளில் இருந்து வந்திருக்கிறது. 'குழந்தைகள் பசி இல்லாமல் மாந்தமாக இருக்கும்போது இந்தக் கட்டையில் உரைத்தோ அல்லது உடைத்துக் கஷாயமாக்கியோ பயன்படுத்தி மாந்தம் போக்கியிருக்கின்றனர்’ என்ற குறிப்பை தமிழ் மூதறிஞர் கி.ஆ.பெ. வரை பலர் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், இப்போது அதைக் கேட்டால் பலருக்கும் தெரியவில்லை. மாந்தத்துக்கு அதிகம் பயன்படுவது நுணா மரக்கட்டையா, வேங்கை மரக்கட்டையா எனச் சித்த மருத்துவர்கள் இப்போதும் ஆராய்ந்து வருகின்றனர்.
கருச்சிதைவு குறைந்திருப்பது, மகப்பேறு சமயத்தில் தாய்-சேய் மரணங்கள் பெருவாரியாகக் குறைந்தது, பெருமளவில் அதிகரித்துள்ள தாய்-சேய் நலம் எல்லாமுமே நவீன மருத்துவமும் பொதுச் சுகாதாரப் புரிதலும் வந்ததால்தான் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. அதே சமயம் கொஞ்சம் அழுக்குப் படிந்திருக்கிறது என்பதற்காக, கழுத்துச் சங்கிலியைக் கழட்டி எறிவோமா நாம்? ஆனால், மரபு விஷயத்தில் அப்படித்தான் நடக்கிறது. நவீன அறிவியலாளரும் நவீன மருத்துவத் துறையும், இணைந்து பாரம்பரிய மருத்துவத்தில் தொலைந்தும், தூசி ஏறியும், மறைந்தும் இருக்கும் பல மகத்துவங்களை மீட்டு எடுக்க வேண்டிய காலம் இது. இணைவதில் மீட்டு எடுக்கவேண்டியது, பன்னாட்டுப் பிடியில் சிக்கியிருக்கும் நலவாழ்வு மட்டுமல்ல; இந்திய மண்ணின் உற்பத்தித் திறனும்தான்!
- நலம் பரவும்...
பஞ்சமூட்டக்கஞ்சி!
'பஞ்ச காலத்தில் ஊட்டக்கஞ்சி’ என்றும், 'ஐந்து பொருட்களால் செய்யப்படுவதால்’ என்றும்... இதற்குப் பெயர்க் காரணம் சொல்வார்கள். அரிசி, உளுந்து, கடலைப்பருப்பு, சிறுபருப்பு, துவரம்பருப்பு எல்லாவற்றிலும் சமபங்கு எடுத்துக்கொண்டு, நன்கு வறுத்து வெள்ளைத்துணி ஒன்றில் தளர்வாக முடிந்துகொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு, நீரின் மத்தியில் இது தொங்கும்படியாக பாத்திரத்தின் குறுக்கே ஒரு கம்பியில் கட்டி நீரைக் கொதிக்கவிட வேண்டும். நீரில் மூழ்கி இருக்கும் பொட்டலத்தின் தானியங்கள் நன்கு வெந்து, புரதமும் சர்க்கரையும் பிற சத்துக்களும் நீரில் கஞ்சியாகக் கரைந்துவரும். இந்தக் கஞ்சி, உடலுக்கு மிக ஊட்டம் தந்து உடல் எடையை அதிகரிக்கவைக்கும்!
நேந்திரம்பழக் கஞ்சி
நேந்திரம் வாழைக்காயைத் தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக்கி, வெயிலில் உலரவைத்துப் பொடித்துக்கொள்ளவும். அந்தப் பொடியில் துளி சுக்கு சேர்த்து, கஞ்சி காய்ச்சுவதுபோல காய்ச்சிக் கொடுக்க எடை கூடும். இது கேரளா ஸ்பெஷல்!
பஞ்ச தீபாக்கினி சூரணம்
சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், சீரகம்... இவற்றின் கூட்டணிக்கு இப்படி ஒரு பெயர் உண்டு. சுக்கை மேல் தோல் சீவியும், பின் எல்லாவற்றையும் லேசாகப் பொன் வறுவலாக வறுத்தும் பொடி செய்துகொள்ளவும். அந்தக் கூட்டணிப் பொடியின் எடைக்குச் சமமாக நாட்டு ஆர்கானிக் வெல்லம் கலந்துகொண்டால், பஞ்ச தீபாக்கினி சூரணம் ரெடி. பசியைத் தூண்டும் இந்தப் பொடியை, 3 சிட்டிகை எடுத்து, ஒரு ஸ்பூன் அளவு தேனில் கலந்து, குழந்தைகளுக்குக் காலை உணவுக்கு முன் கொடுத்து வந்தால், மதியம் லன்ச் பாக்ஸ் எப்போதும் காலியே!
சாப்பிடாமல் மெலிந்திருக்கும் குழந்தைகளின் பெற்றோருக்கு...
1. அன்பு, அரவணைப்பு, பாராட்டு, அக்கறை, உணவில் அழகூட்டுதல் போன்றவற்றை நீங்கள் சமையலுக்கு முன்னும் பின்னும் சேர்க்காமல் இருப்பதும் பசியின்மைக்குக் காரணங்களாகும். அதில் முதலில் கவனம் செலுத்துங்கள்.
2. 'ஸ்வீட் எடு.. கொண்டாடு!’ என இருக்க வேண்டாம். கொண்டாட்டம் என்றால், 'பழம் எடு... பரவசமாகு’ என கற்றுக்கொடுப்போம். அத்தனை இனிப்புப் பண்டங்களும் பசியடக்கி கபம் வளர்க்கும். குறிப்பாக 'மில்க் ஸ்வீட்’!
3. 'எல்லாத்தையும் சேர்த்துக் கொடுத்திருக்கோம்! அது புத்திசாலியாக்கும், ஓட வைக்கும், உயர வைக்கும், அழகாக்கும்...’ என சந்தையின் பாக்கெட் உணவுகளை முடிந்தவரை அன்றாட உணவில் இருந்து நீக்கிவிடுங்கள். பசி தானாக வரும்.
4. சாதாரண கீரை சாதம், மாவடுடன் மோர் சாதம், பால் கொழுக்கட்டை, மோதகம், ராகி உருண்டை, கருப்பட்டி சோளப் பணியாரம், உளுந்தங்களி, மாலாடு, கறிகோலா உருண்டை, சுறா மீன் புட்டு... இந்த உணவுகள் குழந்தையின் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்கும்!
5. 'எல்லாம் கெடக்கு... அப்படியும் வாயைத் திறக்க மாட்டேங்கிறான்’ என்போர் ஏதேனும் வியாதி இருக்கிறதா என உங்கள் குடும்ப மருத்துவரிடம் கேளுங்கள். தைராய்டு, காசம் முதல் சிலியாக் வியாதி, சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் வரை பல வியாதிகள் பசியின்மைக்குக் காரணங்களாக இருக்கலாம்!


மேலும் தொடர்புக்கு:

சித்த மருத்துவர் அருண் சின்னையா
எண்: 155, 94  வது தெரு,
15 வது செக்டார், கே.கே.நகர்,
சென்னை – 78
அலை பேசி: 98840 76667, 98401 77783
இணைய தளம்: www.drarunchinniah.in
சித்த மருத்துவர் அருண் சின்னையா அவர்களின் சித்த மருத்துவ (குறிப்பு) நூல்களை  (e-book) படிக்க…     சித்த மருத்துவ மின் புத்தகங்களை பெற…

 Android App:  

iOS App:    

செவ்வாய், 26 மே, 2015

குழந்தைகட்கான நல்லுணவு

ஒரு முறை ஒரு உணவு விடுதியில் குடும்பத்துடன் சாப்பிடப் போயிருந்த சமயம். ஒரு பிரபலம் குடும்பத்துடன் சாப்பிட வந்திருந்தார்கள். கூடவே 3 பணிப்பெண்கள். அட! பரவாயில்லையே! வீட்டுப் பணிப்பெண்களை ஒன்றாய் அழைத்து வந்து சாப்பிடும் சமதர்ம சமுதாயத்திற்கு வித்திடுகிறதே அந்தப் பிரபல குடும்பம் என நினைத்தேன்..ஓரிரு நிமிடம் போயிருக்கும். உணவுகள் பரிமாற ஆரம்பித்ததும், மூன்று பணிப்பெண்களும் அவ்வீட்டுக் குழந்தைகளை ஆளுக்கொன்றாய் அழைத்துக் கொண்டு ஓட்டல் வாசலில் இருந்த விளையாட்டு அறையில் வைத்து பிஸ்கட், சிப்ஸ், கூல்டிரிங்க்ஸ் என பொட்டலத்தை பிரித்து கொடுக்க ஆரம்பித்தனர். ஒருபக்கம் பிரபலமும் மற்றொரு பக்கம் அவர்கள் வீட்டு பரிதாபங்களும் ஆரவாரமாய் சாப்பிட ஆரம்பித்தனர்..இன்று இது பிரபல பணக்கார வீட்டில் மட்டுமல்ல.. நகர்ப்புற மக்களில் பலர் வீட்டில் நடக்கும் விஷயம் தான். இப்போது வேகமாக உருவாகிவரும், “நேரமில்லை ஜாதி” குடும்பங்களில் இதற்கு கற்பிக்கப்படும் நியாயம் ரொம்ப அதிகம்.
நல்ல ஆரோக்கியமான குழந்தைப்பருவம் என்பது, வாழ்நாள் எல்லாம் ஆரோக்கியமாக இருப்பதற்கான அடிப்படை. உங்கள் வீட்டு குழந்தைச் செல்வம் சரியான வேளையில் சரியான உணவை விரும்பிச் சாப்பிட வைத்து விட்டீர்கள் என்றால் பெற்றோராய் வாழ்வில் பெரும் பொறுப்பை செய்து முடித்ததாக அர்த்தம். “எனக்கு வேணாம்; பிடிக்கவேயில்லை;” என்ற வார்த்தைகளைக் கேட்டு கேட்டு, கெஞ்சி, கொஞ்சி, மிரட்டி கடைசியில் மன நோயாளியாகவே மாறிவிடும் சில அம்மாக்களை எனக்குத் தெரியும். கூடவே “என் குழந்தை அவங்க அப்பா..அவங்க ஃபேமிலி மாதிரி கொஞ்சம் பிடிவாதம் ஜாஸ்தி சார்!” என தன் ஏழாம் அறிவில் சுருதி சேர்க்கும், அம்மாவும், “உனக்கு பொறுமையில்லை..பிள்ளைய சாப்பிட வைக்கிறத விட உனக்கு வேற என்ன வேலை?; உனக்கு அக்கறையில்லை..”-என ஏதோ எக்ஸிபிசனில் குழந்தையை வாங்கி வந்து மாதிரி தனக்கு சம்பந்தமில்லாதது போல் பேசும் மேல்ஷாவனிஸ அப்பாவும் நிறையவே உள்ள படித்த ஊர் இது. குழந்தைய சாப்பிட வைப்பதில் அப்பா அம்மா இருவருக்கும் சமபங்கு உண்டு என்பதை ஒருபோதும் மறக்க வேணாம்.
குழந்தைக்கு உணவூட்டுவது என்பது அறிவியல் இல்லை. ஒரு கலை.

வாழைப்பழத்தில பொட்டாசியம் இருக்கிறதென்று அக்குழந்தைக்கு தெரியாது..கார்ட்டூனில் பார்த்த பழம் சாப்பிடும் யானையும், தொலியில் வழுக்கி விழுந்த தாத்தாவும் மட்டுமே தெரியும். அந்த தாத்தா-யானையில் துவங்கி, பொட்டாசியத்தில் வந்து சேர்க்கும் வித்தையைச் செய்ய வேண்டியது பெற்றோர் மட்டுமே. துரதிர்ஷ்டவசமாக எந்த பட்டப்படிப்பும் தொலைதூரப்படிப்பாக இந்த வித்தையை நடத்துவதும் இல்லை. தேவையெல்லாம் நிறைய அக்கறை; நிறைய பொறுமை; கொஞ்சம் மெனக்கெடல்.
குழந்தை என்ன சாப்பிட வேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற அறிவை இணையத்தில் தேடும் முன்பு, வீட்டு நல்இதயத்தில் தேடுங்கள். மருத்துவரிடம் கேட்கும் முன்பு அம்மாவிடம், மாமியாரிடம், பாட்டியிடம் கேளுங்கள். நல்ல புத்தகங்களிடம் தேடுங்கள். அதே வயசு குழந்தையை வளர்த்துவரும் பக்கத்துவீட்டுப் பெண்ணிடம் பேசுங்கள். 80% சூத்திரங்கள் இதில் கிடைத்துவிடும். நீங்கள் இதல்லாம் எளிதில் கிட்டாத சென்னை மாதிரி ஆர்டிக் அண்டார்டிகா கண்டத்தில் ஐயோ பாவமாக வசித்து வருபவராக இருந்தால், உங்களுக்கு இந்தக் கட்டுரை கொஞ்சம் உதவும்.
ஒன்று முதல் ஒன்றரை வயது மட்டும் தாய்ப்பால் மறுக்காமல், மறக்காமல் கொடுப்பது முதல் கடமை. 5 - 6 மாதங்களுக்கு மேல் தாய்ப்பால் மட்டும் போதாத போது கூடுதலாக உணவுத் தேடல் துவங்கும் போதுதான் ஒவ்வொன்றாய் குழந்தைக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.
அரிசி-பாசிபருப்பு-கஞ்சி, நேந்திரபழக் கஞ்சி என துவங்கி 7-8 மாதங்களில் கீரை கடைந்த சாதம், என தொடரவும். ஒருநாள் அரிசி; மறுநாள் கேழ்வரகு; ஒருநாள் தினை என குழந்தைக்கு கஞ்சியாகவோ அல்லது குழைந்த சாதமாகவோ அறிமுகப்படுத்துங்கள். காய்கறி சூப் (நார்களை நீக்கி) 1-வயது குழந்தைக்கு கொடுத்துவாருங்கள். கொடுக்கும் போதே அந்த காய்கறி குறித்த கர்னபரம்பரைக்கதையோ, கார்ட்டூனோ சொல்லுங்கள். முடிந்தால் அந்த காய்கறி வாங்க கடைக்கு அழைத்துச் செல்லுங்கள். மனது ஒட்டினால், வாய் திறக்கும். ஒண்ணும் சாப்பிட மாட்டேங்கிறான்; ஒரு டம்ளர் பாலாவது குடி; என பால் ஊற்றி வளர்ப்பது கெடுதி என்கிறது தற்போதைய உணவு அறிவியல். கொஞ்சம் கூடுதல் அக்கறையிலோ அல்லது சின்ன புள்ளதானே சாப்பிட்டு போறான் என சோம்பேறிகள் ரெகமன்டேஷனிலோ பிள்ளை, பிள்ளையார் மாதிரி உருண்டு திரண்டு உருவாக ஆரம்பித்தால் பாலையும் தயிரையும் கண்ணில் காட்டாதீர்கள். மழலை உடற்பருமனுக்கு தயிர்சாதமும் பாலும் உருளைகிழங்கு சிப்ஸும் சாக்லேட்டும் தான் பெருவாரியான காரணம்.
இனிப்பு உடலை வளர்க்கும் ஒரு சுவை. வளரும் குழந்தைக்கு குறைந்த அளவில் அது நல்லதே. வெள்ளைச் சீனியாக இல்லாமல். பனை வெல்லத்தில், நாட்டு வெல்லத்தில் செய்யும் அடை பிரதமன், நேந்திரம்பழ ஜாம், அதிரசம் –போன்ற உணவுகள் அவ்வப்போது தரலாம். மில்க் சாக்லேட் அதிகம் வேண்டாம். 10வயதிற்குள்ளாக வயதுக்கு வரும் பெண்குழந்தைக்கு மில்க் சாக்லேட் காரணமாக இருக்கலாம்
முருங்கைக் கீரை, சிறு கீரை, அரை கீரை-ஆகியன குழந்தைகட்கான கீரைத் தேர்வில் முக்கியமானவை. கேரட்டைக் காட்டிலும் முருங்கைக் கீரையில் கண்ணுக்கு தேவையான கரோட்டின் சத்து அதிகம். உருளை, சேனைக்கிழங்கு(elephant yam) உடல் எடை தேறாத குழந்தைக்கு மிக நல்லது. வாரம் இருமுறை கொஞ்சம் இஞ்சி, மிளகுத்தூள்சேர்த்து கொடுக்கவும். பழங்களில் நேந்திரம்பழம், மலைவாழை, கூழாஞ்செண்டு, மட்டி, கோழிக்கூடு –வகை வாழைப்பழங்கள் ரொம்பவே நல்லது. மாதுளை, சமீபத்தில் தேசிய உணவியல் கழகத்தால் உலக பழ தரத்தில் முதலிடத்தை பெற்றுள்ள, நம்ம ஊர் கொய்யா( நல்ல வேளை வழக்கம் போல் நியூசிலாந்தின் கிவி, ஸ்காண்டினேவியன் ஸ்ட்ராபெர்ரி தான் சிறப்பு என புத்திசாலி விஞ்ஞானிகள் சொல்லவில்லை), ஆரஞ்சு, பப்பாளி போன்ற பழங்களை 2-3 வயதிற்குள் பழக்கிவிடுவது ரொம்ப அவசியம்.

ஒருமுறை பஸ்சில் பயணம் செய்யும் போது, ஒரு பெண் தன்னிடமிருந்த ஆரஞ்சை எடுத்து அதன் சுளையை தன் சுத்தமான கர்சிப்பில் வைத்துச் சுற்றி அதன் கூர் முனையை தன் 7 மாத கைக்குழந்தைக்கு கொடுத்தாள். குழந்தை தாய்ப்பால் அருந்துவது போல், பழச்சாற்றை துணியில் சப்பி சாப்பிட்டது. தாகமும் தணித்து, ஊட்டமும் தரும் அந்த தாயின் வித்தை ஒரு கவிதை போல் மனதில் இன்னமும் இருக்கிறது. தேவையெல்லாம் அக்கறை மட்டுமே; கலோரி கணக்கு பார்த்து, கடைசியில் தோற்றுப்போவதல்ல.
கொழுப்பு பயம் கூடியுள்ள காலம் இது. பொய்யுக்கு பயப்படுவதை விட நெய்யுக்குப் பலருக்கும் பயம். ஆனால் குழந்தைக்கு பசு நெய்யும், தேங்காய் எண்ணெயும் ரொம்ப அவசியம். பருப்பு சாதத்தில், பாயாசத்தில் என இதனை சிறிதளவு சேர்ப்பது முக்கியம். invisible fat- கொழுப்பானது நாம் சாப்பிடும் அரிசி, பருப்பு தானியம் மூலமாக வந்து சேரும். அது போதாது. Poly unsaturated, mono saturated மற்றும் saturated கொழுப்பு வகைகள் சேர்ந்த கொழுப்பு கொஞ்சம் அளவில் குழந்தைக்கு கண்டிப்பாக தேவை. இதில் இருந்து பெறப்படும் essential fatty acids மூலமாகத் தான் fat soluble vitamins வகைகளை, (கண்ணைக் காக்கும் vitamin A அதில் அடக்கம்) கரைக்கும் கொழுப்பு அமிலத்தை, prostaglandins எனும் உடலுள் ஏற்படும் காயங்கள் ஆற்றுவது முதல் கான்சர் வரை வராது காக்கும் பொருளை, உருவாக்குவதும் சாத்தியம். அதனால் இரத்தக் கொழுப்பைக் கண்டு அஞ்சி, எண்ணெயின் மீது அவதூறு பரப்பவேண்டாம். அளவோடு சாப்பிட மறக்க வேண்டாம். Pre mature baby –என்றால் கண்டிப்பாக பருப்புசாதத்தில் சிறுதுளி தேங்காய் எண்ணெய் விட்டு கொடுங்கள்.
ஆடியோ பாடியோ அல்லது “டாக்டர் மாமகிட்ட சொல்லி முருங்கைக்காய் ஊசி போடச்சொல்லவா? அல்லது செல்லமாய் நான் முருங்கைக்காய் ஊட்டவா?”, என அழகாய் பயமுறுத்தியோ, சாப்பிட வையுங்கள். எதிர்காலத் தலைமுறை எதிர்கொள்ள வேண்டிய நோய்க்கூட்ட சவால்கள் ஏராளம்.
”புஜ்ஜுகண்ணா..இதுதான் கடைசி வாய்..வாங்கிக்கோடா!” என நீங்கள் ஊட்டும் உணவுருண்டை மட்டும் தான் அந்த சவால்களைச் சமாளிக்கக் கூடும்!.....


மேலும் தொடர்புக்கு:
சித்த மருத்துவர் அருண் சின்னையா
எண்: 155, 94  வது தெரு,
15 வது செக்டார், கே.கே.நகர்,
சென்னை – 78
அலை பேசி: 98840 76667, 98401 77783
இணைய தளம்: www.drarunchinniah.in
சித்த மருத்துவர் அருண் சின்னையா அவர்களின் சித்த மருத்துவ (குறிப்பு) நூல்களை  (e-book) படிக்க…     சித்த மருத்துவ மின் புத்தகங்களை பெற…

 Android App:  

iOS App:    

திங்கள், 25 மே, 2015

பச்சிளம் குழந்தைக்கு பாதுகாப்பான உணவு

”அடிச்சட்டி ஆனை போல” எனச் சொல்லி நம் வீட்டுப் பாட்டி, பருப்பு சாதத்தின் கடைசி உருண்டையை வழித்து, ”வேணாம் போதும்!” என மழலை சைகைமொழியில் மறுக்கும் 9 மாத குழந்தையை மயக்கி, அந்த சின்ன மீன் குஞ்சின் வாய் போல் இருக்கும் செல்லப் பேத்தியின் உதடு நோகாமல், ஊட்டும் அழகு அலாதி. எங்க வீட்டு நெய் மணமோ அல்லது மாமியாரது கை மணமோ பிள்ளை சாப்பிட்டதில் கிடைக்கும் மகிழ்ச்சி தாய்க்கு வேறெதிலும் கிடைப்பதில்லை.
தன் அழகு செல்லம், ஆரோக்கியச் செல்லமாக ஊட்டமாக வளர என்ன செய்ய வேண்டும்? பிள்ளைக்கு உணவூட்டுவது பிரம்ம பிரத்தனமாக மாறிவருகிறதே..எப்படி என் கைக்குழந்தையை கருத்தாக சாப்பிட வைத்து கட்டுடல் பெற வைப்பது? இந்த அறிவியல் ஒரு அற்புதமான கலை.
ஆரோக்கியமான, சரியான உடல் எடையுடன் குழந்தை பெற்றெடுக்க வேண்டுமெனில், கருத்தரித்த காலம் முதல், முதல் வாந்தியில் நாணச் சிரிப்பு வந்த நாள் முதல் அக்கறை அவசியம். அப்போது துவங்கும் மெனக்கிடல் மட்டுமே, போஷாக்காக பொசு பொசுவென குழந்தையைப் பெற்றிட உதவிடும்.
கருத்தரிக்கத் திட்டமிட்டவுடன் முதலில் ஃபோலிக் அமில சத்து இரும்புச் சத்து சரியான அளவில் உணவில் இருப்பது அவசியம். அப்போது தான் குழந்தைக்கு தண்டுவட நோய் (spina bifida), சிறுத்த தலை(anancephali) முதலியன நேராமல் இருக்கும்.தாமரை கிழங்கு தண்டு வட இந்தியாவில் பிரபலமானது போல் தென்னாட்டுடையவருக்கு பரிச்சயமில்லை. இந்த தாமரை கிழங்கு ஃபோலிக் அமில சத்து நிறைந்தது. கூடுதலாக தினசரி கீரை, ஸ்பைருலினா(கடல்பாசி), பட்டாணி, கொண்டைக்கடலை, சோளம், கோழிக்கறி(ஈரல்) இவையும் அடிக்கடி சாப்பிட வேண்டும். தவழும் போதே ’செக்கோஸ்லோவேகியா’ சொல்லும் குழந்தைக்கு ’டிஹெச்ஏ’ அவசியம் என்பதை இன்றைய அறிவியல் வலியுறுத்தத் துவங்கி விட்டது. அதற்கு கருத்தரித்துள்ள காலம் தொட்டு, பாலூட்டும் சமயம் எல்லாம் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அவசியம். இந்த ஒமேகா கொழுப்பு மீன் உணவில் அதிகம் உண்டு. மீன் சாப்பிடாதவருக்கு சணல் விதை எண்ணெய்(flax seed oil) அதிகம் ஒமேகா அளிக்கும். இவை தவிர விட்டமின் பி-6, விட்டமின் சி, விட்டமின் டி, கால்சியம், இரும்பு, இன்னும் பல கனிமங்கள் கூடுதல் தேவை.
கருத்தரிக்கும் போது படிப்படியாக 12 கிலோவரை எடை கூட வேண்டும்.கிட்ட்தட்ட 350 கலோரி உணவு கருத்தரித்த காலத்தில் பெண்ணுக்கு கூடுதலாகத் தேவை. பாலூட்டும் காலத்தில் தாய் எடுக்கும் உணவை பொறுத்தே குழந்தையின் எடையும் புரதச் சத்தும் அமையும். ஆனால் ஒரு ஆய்வு என்ன சொல்கிறதென்றால், ’ ஒரு வேளை தாய் வறுமையின் காரணாமாக எடைகுறைவுடன் இருந்தாலும் தன் மகவிற்குக் கூடுதல் புரதத்தை உற்பத்தி செய்து தருவாளாம். தாய்மையின் விந்தையும் பரிவின் இலக்கணமும் இது தான் போலும்!.
100மிலி தாய்ப்பால் உற்பத்தியாக 85 கலோரி கூடுதல் தேவை. கிட்ட்தட்ட 750மிலி தாய்ப்பால் முதல் 6 மாதங்கட்கும் அடுத்து ஆறு மாதங்களுக்கு 600மிலி தாய்ப்பால் சுரக்கத் துவங்கும். அதற்கேற்றாற் போல் உணவில் கூடுதல் கவனம் தேவை. பால் சுரப்பைத் தூண்ட உணவில் பால், கீரை, முட்டை, மீன்(சுறாப்புட்டு), வெள்ளைப்பூண்டு, சிறிய வெங்காயம், அதிகம் சேர்க்க வேண்டும்.. அடிக்கடி பாலூட்டுவது தான் முதல்படி. குழந்தைக்கு 2-3 மணி நேரத்திற்கு ஒருமுறையேனும் பாலூட்ட வேண்டும். இரு மார்பகத்தாலும் பாலூட்டுவது அவசியம். குழந்தை தானாக பாலை நிறுத்தும் வரை ஒவ்வொருமுறையும் பாலூட்ட வேண்டும். பாலூட்டும் மார்பகத்தை அவ்வப்போது ஒற்றடம் அல்லது மசாஜ் செய்வதும் சுரப்பை ஊக்குவிக்கும். அப்படியும் பால் சுரப்பு குறைவாக இருப்பின் பாலூட்டுவதை நிறுத்திவிடாமல், மருத்துவரை அணுகி தகுந்த மருத்துவம் எடுக்க வேண்டும். ஒருவேளை சுரப்பு குறையும் பட்சத்தில் சதாவரி இலேகியம் கண்டிப்பாக அடுத்த ஆறு மாதங்கள் எடுப்பது நல்லது.
ஆறு மாதங்கட்குப் பின் திட உணவு தேவைப்பட துவங்கும் போது புழுங்கல் அரிசி பாசிப்பயறு கஞ்சியில் துளி தேங்காய் எண்ணெய் சேர்த்து கொடுக்கவும். நேந்திரங்காய் பொடியின் கஞ்சிமாவு குழந்தை எடை உயர பெரிதும் உதவும். மெல்ல மெல்ல படிப்படியாக கீரை கடைசல் குழைந்த சாதம், தயிர்சாத உணவு என அன்றாட உணவிற்கு மாறலாம்.

கூடியவரை ஃபார்முலா உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதுபோல் கூடுதல் விட்டமின் டானிக் என எடுப்பதும் நல்லதல்ல. எந்த விட்டமின்கள் எல்லாம் தேவை அவை எந்த காய் கனிகளில் உள்ளதென அறிந்து வைத்திருந்து அதை உங்கள் பாப்பாவின் மனக்களிப்புக்கு ஏற்றாற்போல் தயார்படுத்தி தருவது சிறப்பு.
உரை மருந்து- நம் முன்னோர்கள் சொல்லிச் சென்ற தடுப்பு மருந்து. பிரசவ லேகியம்-பால் சுரக்கும் சதாவரி லேகியம் - குழந்தைக்கு உரை மருந்து இம்மூன்றுதான் அந்த கால தாய் சேய் மருத்துவத்தின் முக்கிய மருந்து தொகுப்பு. ஒவ்வொரு வீட்டிலும் இதைத் தயார் செய்யும் உத்தி, தயங்காமல் பயன்படுத்தும் பக்குவம் எல்லோரிடமும் இருந்தது. நவீனம் தொலைத்த பல விஷயங்களிலும் வணிக கலாச்சாரமாகிவிட்ட மருத்துவம் மறுக்கும் விஷயங்களிலும் நாம் தொலைத்து விட்ட்து இந்த அற்புத உணவையும்தான். ஆனால், இன்றைய அறிவியல் இதன் ஒவ்வொரு பொருளின் மருத்துவ பயனையும் இப்போது வியந்து உறுதிப்படுத்தி வருகிறது. குழந்தை சாப்பிடுவதும், சாப்பிட வைப்பதும் அவர்களுக்கான சாப்பாட்டுப் பொருளும் பெரும் சந்தையாக மாறிவருகிறது. இது மிகவும் வருந்தத்தக்க செய்தி. நம் பாரம்பரியம் சொன்ன விஷயங்களை மடமை என ஒதுக்காமல், அக்கறையுடன் தேர்ந்து எடுத்து பயன்படுத்துவது இந்த பிடியில் இருந்து மெல்ல மெல்ல விலக ஒரே வழி


மேலும் தொடர்புக்கு:
சித்த மருத்துவர் அருண் சின்னையா
எண்: 155, 94  வது தெரு,
15 வது செக்டார், கே.கே.நகர்,
சென்னை – 78
அலை பேசி: 98840 76667, 98401 77783
இணைய தளம்: www.drarunchinniah.in
சித்த மருத்துவர் அருண் சின்னையா அவர்களின் சித்த மருத்துவ (குறிப்பு) நூல்களை  (e-book) படிக்க…     சித்த மருத்துவ மின் புத்தகங்களை பெற…

 Android App:  

iOS App:    

சனி, 23 மே, 2015

கோடை வெயிலை எப்படிச் சமாளிக்கலாம்? நலமுடன்..

கொளுத்தும் கோடை ஒருபக்கம்; புழுங்கவைக்கும் மின்தடை ஒருபக்கம் . எங்கேயாவது ஓடிபோகலாமா? என்ற கேள்வி வராவிட்டால் தான் உடம்பில் ஏதோ பிரச்னை என்று பொருள். கடைசி முழு ஆண்டுத் தேர்வு புவியியல் பரிட்சையில் கடைசி கேள்வியை எழுதி, காவிரி டெல்டா பகுதிய மொட்டை பென்சிலில் பட்டையாக தீட்டி, அப்பாடா! என கொடுத்த நூலில் பேப்பரை கட்டி முடிக்கும் போது வருமே ஒரு பயங்கர சந்தோஷம், இப்போது பரபரப்பாய் டி.வியில் ஒரு கோடி தாரேன்னு சொல்லி, மொக்கையாக வரும் முதல் பத்து கேள்வி தரும் சந்தாசத்தை விட மிக மிக அதிகம்.
அப்போதெல்லாம் மணிமுத்தாறு போலாமா? பானதீர்த்தம் போகலாமா? விவேகான்ந்தர் பாறைக்கு மோட்டார் படகில் போகலாமா? என்பது தான் அதிகபட்ச விடுமுறைத் தலங்கள். அதற்கும் கூட, சமீபத்தில் வேலை கிடைத்து, கல்யாணம் ஆகாதத் தாய்மாமா, சமீபமாய் கல்யாணம் ஆன ஜோரில், எப்போதும் சிரிப்போடு சிலகாலம் மட்டும் இருக்கும் அக்காவும் அவங்க வீட்டுமாமாவும் வீட்டுக்கு விடுமுறைக்கு வரணும். அப்போது தான் டூர் போக முடியும். இப்போது நிலைமை மாறிவிட்டது. 3 நாள் கோலாலம்பூர், 4 நாள் சிம்லா என கடனட்டையை தேய்த்தாவது, விடுமுறையை அளவளாவிக் கொண்டாட கிளம்புகிறோம். குதூகலமாய் விடுமுறை கழிய வேண்டுமென்றால், குதூகலமாய் மனமும், ஆரோக்கியமாய் உடலும் இருக்க வேண்டும். டூர் போற இடத்தில், போற கார்-பஸ் எல்லாம், ”உவ்வே!” என்று வாந்தி எடுத்துக் கொண்டு, “சார் சார்! வண்டிய கொஞ்சம் ஒரம் கட்டுங்க..போண்டா ஒத்துக்கலைன்னு நினைக்கிரேன்னு”, மினரல் வாட்டரை தூக்கிக் கொண்டு மறைவிடம் நோக்கி மறைவது டூரை மொத்தமாய் நாற்றமடிக்கச் செய்யும்.
முதலில் தண்ணீர். எங்கு போனாலும் சுத்தமான தண்ணீர் கையில் வைத்திருப்பது மிக அவசியம். தண்ணீரில் தான் பல தொற்றுக் கிருமிகள் பரவும் அபாயம் உண்டு.காய்ச்சி ஆறிய தண்ணீர்தான் உத்தமம். பிளாஸ்டிக் புட்டியில் வரும் பல பாட்டில்தண்ணீர் ஓடையில் பிடித்து விற்பதாக ‘யூ டியூபில்’ கூட உண்மைக்காட்சியை காண்பிக்கிறார்கள். கோடையில் உடலின் நீர்த்துவம் 2% குறைந்தால் கூட, “ இதுக்கு முன்னாடி உங்களை எங்கேயோ பார்த்திருக்கேனே”-ன்னு வீட்டுக்காரரை கலவரப்படுத்தும் குழப்ப வசனம் வரக் கூடும். குழந்தைகட்கும் முதியோருக்கும் தாக உணர்வு அதிகம் இராது. நாம் தாம் அடிக்கடி தண்ணீர் கொடுக்க வேண்டும். புட்டியில் விற்கும் கரியமில வாயுகலந்த சோப்புத் தண்ணீரை விட மோர், இளநீர், பழசாறு, பதனீர் கோடையில் நலம் காக்கும் ஆரோக்கிய பானங்கள். நிலத்தடி நீரை நம்மிடையே உறிஞ்சி, பெயர் தெரியாத வேதிக்கலவையை வெளி நாட்டிலிருந்து கொணர்ந்து வந்து கலக்கி, நம்ம ஊர் பிரபலங்களை விலை பேசி நடிக்க வைத்து, விற்கும் அந்த பானங்கள், அதிக விலையில் ஆஸ்டியோபோரோஸிசில் இருந்து இன்னும் பெயர் வைக்காத பல நோயைத் தரும். இனி இந்த கோடையில் உங்கள் உள்ளம் கேட்கட்டும் “மோர்!”( இங்கிலீஷ் மோர் இல்லைங்க! தமிழ் மோர்..எதுக்கும் தெளிவாய் சொல்லிடலாம்).
அடுத்து கோடை விடுமுறையில் பயணப்படும் இடத்தில் எல்லாம், போற வார வழியில் மிளகாய் பஜ்ஜி, வாழைக்காய் போண்டா என வாயை மென்று கொண்டே போவது நல்லதல்ல. சில நேரங்களில் அதைத் தயாரிக்கும் கடைக்காரர் எண்ணெய் விற்கின்ற விலையில் ரிபைண்ட் ஆயில் எல்லாம் வாங்காமல், எஞ்சின் ஆயில், பழைய மீந்து போன மூட்டுவலி தைலம் எல்லாம் போட்டு பஜ்ஜி சுட்டுத் தருவதாக கேள்வி. டூர்-னா கொறிக்க இல்லாமலா? என சண்டை கட்டுவோருக்கு, தயவு செய்து கொறீக்க சுவைக்க நல்ல தின்பண்டங்களை வீட்டில் தயாரித்தோ, சுத்தமாய்த் தயாரிக்கும் லாலா கடையிலோ வாங்கி வாருங்கள். ஆனால் வழியெங்கும் தின்று கொண்டே போய், தாஜ்மகால் முன் நின்று, ”மசாலாகடலை நல்லா மொறு மொறுன்னு இருக்குல்லே”-ன்னு பேசாதீங்க! ஷாஜஹானுக்கே வலிக்கும்.
கோடையில் வயிற்றுப்போக்கு அதிகம் வரக் கூடும். மோர் லாக்டோபாஸிலஸ் எனும் புரோபயாடிக்ஸ் நிறைந்துள்ள மருத்துவ பானம். கழிச்சலை வராது தடுக்கும் மருந்தும் கூட. அசீரணத்தில் வரும் வயிற்றுப் போக்கிற்கு ஓமம் வறுத்து செய்யும் கஷாயமோ அல்லது ஓம வாட்ட்ரோ நல்லது. நீர்த்துவமாக போகும் வயிற்றுப் போக்கை நிறுத்த, மாதுளை ஓடை பொடி செய்து கொடுங்கள். குழந்தைகளாக இருப்பின் கூடுதல் கவனம் தேவை. நீர்த்துவம் குறைய விடக் கூடாது. தண்ணீரில் உப்பு இனிப்பு கரைந்த கரைசல் அடிக்கடி கொடுக்க வேண்டும்.
கோடையில் வரும் வெயில் கொப்புளங்கள் எனும் வேனல் கட்டி, வேர்க்குருக்கள், வியர்வையில் வரும் பூஞ்சை காளான்கள் தோலை காயப்படுத்தும். தினசரி இரு முறை குழந்தைகளும் பெரியவரும் குளிப்பது நல்லது. நலுங்குமாவு தேய்த்து குளிப்பது, தோலை வனப்பாகவும் ஆக்கும். சித்தமருத்துவரிடம் கிடைக்கும் குங்கிலிய வெண்ணெய், வேனல் கட்டிக்கும், சீமை அகத்தி களிம்பு தோல் பூஞ்சைக்கும் நல்லது. வெயிலில் தோல் நிறம் மங்கி நிற்பதற்கு இயற்கை தந்த சன் ஸ்கிரீனர் சோற்றுக் கற்றாழை. அதனை நேரடியாகவோ அது கலந்த கிரீமையோ தடவுவது நல்லதுதான். கிரீம்கள் எனில் spf அளவு குறைவாக உள்ள கிரீமை தேர்ந்தெடுங்கள். அதிகம் சன் ஸ்கிரீனர் தேய்ப்பது விட்டமின் டி சத்து சூரிய ஒளியில் இருந்து உள்போகாது ஆஸ்டியோபோரோஸிஸ் முதல் கான்சர் வரை வர வைக்கும் என்கிறனர் சமீபத்திய ஆராய்ச்சியாளர்கள்.
கோடையில் அடிக்கடி கோழிக்கறி சாப்பிடுவது; கொள்ளு ரசம் சாப்பிடுவது நல்லதல்ல. சூட்டைத் தரும். வாய்ப்புண் வரவைக்கும். மாதவிடாயை நடுவில் ஒருமுறை தலைகாட்ட வைத்துவிடும். வெயில் காலத்தில் நீர்க்காய்கறிகளை பாசிப்பருப்பு சேர்த்து கூட்டு போல் செய்யவும். உடலைக் குளிர்ப்பித்து, கோடையில் நாம் இழக்கும் உப்புக்களையும் தருபவை பீர்க்கு, சுரை, புடலை, வெள்ளைப்பூசணீ போன்ற நீர்க்காய்கறிகள்.
விடுமுறைக்கு போகும் போது கூலிங்கிளாஸ், தொப்பி, டைட் ஜீன்ஸ் இதெல்லாம் எடுத்து, “நிச்சயம் அழகாய் தெரிவோம்!” என்ற அசாத்திய துணிச்சலில் தயாராய் நாம் போவோம். அப்புறம் அதை போட்டோவில் குளோஸ் அப்பில் பார்க்கும் போது தான், ஒரே நகைச்சுவையாய் இருக்கும். ஆதலால் அந்த தேவையில்லாத அந்த மேக்கப் சாதனங்களுடன் தேவையான காய்ச்சல், வாந்தி-பேதிக்கு மருந்தும், மெடிக்கல் இன்சூரன்ஸ் கார்டெனும் ஆபத்பாந்தவன் அட்டையையும் மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.
இந்த கோடை விடுமுறையில் மனசை லேசாக்குங்கள். கொன்றைப் பூவின் மஞ்சளை ரசியுங்கள்; எங்கோ சத்தமிடும் தூக்கனாங் குருவியின் இசையைக் கேளுங்கள். எத்தனைப் புண்படுத்தினாலும், இன்னும் இனிக்கும் மலையை பார்த்து மலையுங்கள். வலித்து, இரும்புச் சக்கரத்தை சுற்றி இனிப்பை பிழிந்து தரும் கரும்புச் சர்க்கரைக்காரனின் வறுமையை யோசியுங்கள். விசாலமாய்ப் பரவியுள்ள கடலை வாய்பிளந்து பார்த்து நிற்கையில் குளிர்ந்து முத்தமிட்டுச் செல்லும் கடலலை, இன்னும் சில கோடி ஆண்டுகள் என்னை விட்டுச் சொல்வாயோ எனும் மன்றாட்டை புரிந்து கொள்ளுங்கள். விடுமுறை நிச்சயம் உங்களுள் மாற்றம் தரும்; மகிழச்சியுடன்!


மேலும் தொடர்புக்கு:
சித்த மருத்துவர் அருண் சின்னையா
எண்: 155, 94  வது தெரு,
15 வது செக்டார், கே.கே.நகர்,
சென்னை – 78
அலை பேசி: 98840 76667, 98401 77783
இணைய தளம்: www.drarunchinniah.in
சித்த மருத்துவர் அருண் சின்னையா அவர்களின் சித்த மருத்துவ (குறிப்பு) நூல்களை  (e-book) படிக்க…     சித்த மருத்துவ மின் புத்தகங்களை பெற…

 Android App:  

iOS App:    

வெள்ளி, 22 மே, 2015

வாதம்-பித்தம் -கபம்

”எதைத் தின்னால் இந்த ’பித்தம்’ தெளியும்? ஒருவேளை ’வாதக்’க் குடைச்சலாய் இருக்குமோ? நெஞ்சில் ’கபம்’ கட்டியிருக்கு...”,என்கிற வசனங்கள் இன்று கொஞ்சம் கொஞ்சமாய் வழக்கொழிந்து வருகிறது. ஆனால், நம் மூத்த தலைமுறையில் இவ்வரிகள் ரொம்ப முக்கியமானவை. இன்னும்கூட நம் பாட்டி தாத்தா இப்படிப் பேசிக் கொள்வதை, கிராமங்களில் மருத்துவரிடம் தம் நோயை அவர்கள் இப்படிச் சொல்வதை பார்க்க முடியும். நாகரீக அனாதைகளாகி வரும் இளையதலைமுறையான, இன்றைய ’கூகிள்’ தலைமுறைக்கு, இது புதுசு. லூலூபி பாடுவதில் இருந்து, வெண்பொங்கலுக்கு மிளகை எப்போ போடணும்?, மயிலாப்பூர்ல ஏழு சுத்து கை முறுக்கு எங்கே கிடைக்கும் –ங்கிற வரை எல்லாத்தையுமே கம்ப்யூட்டரில் தேடும் அவர்கட்கு இந்த ”வாதம் பித்தம் கபம்” எனும் வார்த்தைகள்- வரிவிலக்கு பெற்று வந்திருக்கும் தமிழ்ப் பட டைட்டிலோ என்று மட்டுமே யோசிக்க வைக்கும்.

”வாதம், பித்தம், கபம்” -அல்லது ”வளி, அழல், ஐயம்” என்னும் மூன்று விஷயங்களும் நம்ம பாரம்பரிய மருத்துவத்தின் அடித்தளங்கள். உடலின் ஒவ்வொரு அசைவையும் நகர்த்தும் உயிர்த் தாதுக்கள் அவை. அப்ப அதல்லாம் சித்தா ஆயுர்வேத டாக்டர்கள் சமாச்சாரமாச்சே.. நமக்கெதுக்கு? என நகர வேண்டாம். இந்த வாத பித்தம் கபம் குறித்த அடிப்படை அறிவு நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். முன்பு இருந்திருந்தது. ”ஐய்யோ..ஐஸ்கிரீமா? த்ரோட் இன்ஃபெக்‌ஷனாயிடும்! ரோட்டோர பரோட்டாவா..அமீபியாஸிஸ் வந்துடப் போகுது,” என்ற அறிவை வளர்க்கும் நாம், “உருளைக்கிழங்கு போண்டா நமக்கு வேண்டா. அது வாயு கொடுக்கும். வாதக் குடைச்சல் வந்துடும். மழை நேரத்தில தர்பூசணி எதுக்கு கபம் கட்டிக்க போகுது”-என்கிற மாதிரியான நம் தினசரி உணவும் அது அதிகரிக்க அல்லது குறைக்க வைக்கும் உடலின் இந்த மூன்று முக்கிய விஷயங்கள் குறித்த அறிவும் தெரிந்திருக்க வேண்டும். அந்த அறிவை இந்த வாரம் கொஞ்சம் இப்படி தீட்டுவோமா?.


”முத்தாது” என்று தமிழ் சித்தத்திலும் ”த்ரீதோஷா” என்றூ ஆயுர்வேதத்திலும் பேசப்படும் இந்த மூன்று விஷயத்தை தான் ”மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர் தொகுத்த வளி முதலாய மூன்று”- என்று நம் திருவள்ளுவர் நோயின் அடிப்படையாகச் சொல்லியிருக்கிறார்.

இந்த வாதம், நம் உடலின் இயக்கத்தை தசை, மூட்டுக்கள், எலும்பு இவற்றின் பணியை, சீரான சுவாசத்தை சரியான மலம் கழிப்பதை எல்லாம் பார்த்துக் கொள்ளும். பித்தம், தன் வெப்பத்தால் உடலை காப்பது. இரத்த ஓட்டம், மன ஓட்டம், சீரண சுரப்புகள், நாளமில்லா சுரப்புகள் - போன்ற அனைத்தையும் செய்வது. கபம் உடலெங்கும் தேவையான இடத்தில் நீர்த்துவத்தையும் நெய்ப்புத்தன்மையையும் கொடுத்து எல்லா பணியையும் தடையின்றி செய்ய உதவியாய் இருப்பது. இந்த மூன்று வாத பித்த கபமும் சரியான கூட்டணியாய் பணிபுரிந்தால் உடம்பு எனும் பார்லிமெண்ட் ஒழுங்காய் நடக்கும். ஒண்ணு ”காமன் வெல்த்”திலும்-இன்னொன்று அலைக்கற்றை ஒதுக்கீட்டிலும் சேட்டை செய்தால்- ஒரே நோய்களின் கூச்சலும் குழப்பமும் தான் உடம்பு பார்லிமெண்ட்டில் ஓடும்.

இந்தக் கூட்டணி ஒழுங்காய் வேலை செய்ய உணவு, ரொம்ப முக்கியம். மனமும் பணியும் கூட கூட்டணிப் பணிக்கு அவசியமானது. ஒருவருக்கு மூட்டு வலி உள்ளது. கழுத்துவலி எனும் ஸ்பாண்டிலைஸிஸ் உள்ளதென்றால், வாதம் சீர் கெட்டு உள்ளது என்று பொருள். இந்த வியாதிக்காரர்கள் வாதத்தை குறைக்கும் உணவை சாப்பிட வேண்டும். வாதத்தைக் கூட்டும் உணவை காசியில் விட்டு விடலாம். புளி, உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வாழைக்காய், கொத்தவரை, காராமணி, குளிர்பானங்கள், செரிமனத்திற்கு சிரமம் தரும் மாவுப்பண்டங்கள் வாயுவைத் தரும். வாதத்தைக் கூட்டும். மூட்டுவலிக்காரர், மலக்கட்டு உள்ளோர், ஆஸ்துமாவில் அதிகம் அவதிப்படுவோர் இந்த உணவைக் கூடியவரை தவிர்க்க வேண்டும். வாயுவை வெளியேற்றும் இலவங்கப்பட்டை, மிளகு, புதினா, பூண்டு சீரகம், மடக்கறுத்தான் கீரை, வாய்விடங்கம், இதனை உனவ்பில் சேர்ப்பது வாத்தை குறைத்திட உதவும்.

பித்தம் அதிகரித்தால் அசீரணம் முதல் டிப்ரஷன் வரை பல பிரச்னை வரக் கூடும். அல்சர், இரத்தக்கொதிப்பு, ஆரம்பநிலை மதுமேகம் என பித்த நோய் பட்டியல் பெரிசு. இன்றைய நவீன வேகமான வாழ்வியலில் பெருகும் பல நோய்க்கு இந்த பித்தம் ஒரு முக்கிய காரணம். நாம் தான் இப்போது மனசை கல்லில் அடித்து துவைச்சு காயப் போடும் வேகத்தை தானே விரும்புகிறோம்! பித்தம் அதிலும் அதிகம் வளர்கிறது. பித்தம் குறைக்க உணவில் காரத்தை எண்ணெயை குறைக்க வேண்டும் கோழிக்கறி கூடவே கூடாது. கோதுமைகூட, அதிகம் சேர்த்தால் பித்தம் கூட்டம். அரிசி அந்த விஷயத்தில் சமத்து.(என்ன கொஞ்சம் அளவோடு அரிசியின் சட்டையை அதிகம் கழட்டாமல்(கைக்குத்தல்) சாப்பிடணும்). கரிசலாங்கண்ணி கீரை, கறிவேப்பிலை, சீரகம், தனியா, எலுமிச்சை, மஞ்சள், இஞ்சி- என் இவையெல்லாம் பித்தம் தணிக்கும். பித்தம் குறைக்க கிச்சன் கவனம் மட்டும் போதாது. மனம் குதூகலமாய் இருப்பது அவசியம். இன்றைக்கு சர்க்கரை வியாதி பெருக பலரும் அதிக அரிசி உணவைக் காரனமாய்ச் சொல்கிறோம். அளவுக்கதிகமான மனப்பழு, மனஅழுத்தம் தான் அதைவிட முக்கியக் காரணமாகப் படுகிறது.

ஆதலால் சந்தோஷம் கால்படி, சிரிப்பு அரைப்படி போட்டு, அதில் கண்டிப்பாய்“ நான்”-கிள்ளி நீக்கிப் போட்டு, விட்டுக்கொடுத்தலில் வேகவைத்து புன்னகையில் தாளித்தெடுத்து காதலோடு பரிமாறுங்கள். பித்தமென்ன மொத்தமும் அடங்கும்.
அடுத்து கபம். சளி, இருமல், ஆஸ்துமா, மூக்கடைப்பில் இருந்து கபத்தால் வரும் நோய்கள் நிறைய. பால், இனிப்புகள், நீர்க்காய்கறிகளான தர்பூசணி, மஞ்சள்பூசணி, சுரைக்காய், பீர்க்கு, வெள்ளரி, குளிர்பானம், மில்க் ஸ்வீட், சாக்லெட் என இவையெல்லாம் கபம் வளர்க்கும் காரணிகள்.மழைக்காலத்திலும், கோடைக் காலத்தில் கபநேரமான அதிகாலை மற்றும் இரவுநேரங்களில் தவிர்க்கலாம். மிளகு, சுக்கு, திப்பிலி, ஆடாதொடை, துளசி, கற்பூரவல்லி, தூதுவளை- என இவையெல்லாம் கபம் போக்க உதவும். தும்மிக்கொண்டே வரும் வீட்டுக்காரருக்கு கற்பூரவல்லி பஜ்ஜியும் சுக்கு காபியும் கொடுத்துப் பாருங்கள். தும்மல் அன்றிரவின் தூக்கத்தைக் கெடுக்காது.

வாத பித்த கபம்-இந்த மூன்று வார்த்தை மந்திரக் கூட்டணியை அச்சுபிச்சு இல்லாமல் காப்பதில், சமையல்கூடத்திற்கு சந்தேகமில்லாமல் பங்கு உண்டு.அதற்கு பாரம்பரிய அனுபவம் அவசியம். பாரம்பரிய அனுபவங்கள் பாரம்பரிய சொத்தைக் காட்டிலும் பலம் பொருந்தியவை. அதனை மடமை என்றோ பழசு என்றோ ஒதுக்குவது முட்டாள்தனம். அங்கே இங்கே தவறுகள் சேர்ந்திருக்கும். ஆனால் இன்று சந்தையைக் குறிவைத்து ”2020-இல் இந்த நோயை உருவாக்க வேண்டும். அப்பொது இந்த மருந்தை இங்கு விற்கலாம்,’ என திட்டமிடும் கேவலமான எண்ணங்கள் கண்டிப்பாய் அப்போது கிடையாது. இதை புரிந்து பாரம்பரிய அறிவை கவனமாய் பாதுகாப்போம். அது நம்மையும் நம் தலைமுறையையும் பாதுகாக்கும்!
மேலும் தொடர்புக்கு:


சித்த மருத்துவர் அருண் சின்னையா
எண்: 155, 94  வது தெரு,
15 வது செக்டார், கே.கே.நகர்,
சென்னை – 78
அலை பேசி: 98840 76667, 98401 77783
இணைய தளம்: www.drarunchinniah.in
சித்த மருத்துவர் அருண் சின்னையா அவர்களின் சித்த மருத்துவ (குறிப்பு) நூல்களை  (e-book) படிக்க…     சித்த மருத்துவ மின் புத்தகங்களை பெற…

 Android App:  

iOS App: